ஆரோக்கியமின்மை அல்லது வலுவிழப்புக் காரணமாக ஒருவர் தேவையான தீர்மானமொன்றைச் சுதந்திரமாக எடுக்க முடியாமலுள்ள போது, பொதுவாக குடும்ப அங்கத்தவர்  ஒருவரை, அவரின் சார்பாகத் அத் தீர்மானமெடுக்கும் “மாற்றீட்டாளராக” நியமிப்பதற்கு ஒன்ராறியோ சட்டம் அனுமதிக்கின்றது. இது ஒருவரின் தீர்மானமெடுக்கும் உரிமையை இல்லாமல் செய்வதால், இது ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும்.

சட்டம் பற்றிய அடிப்படை உண்மைகள்
தேவையான தீர்மானத்துடன் தொடர்பான தகவல்களை அல்லது தீர்மானத்தின் பின்விளைவுகளை ஒருவர் விளங்கிக்கொள்ள முடியாத போது, மாற்றீட்டுத் தீர்மானம் எடுப்பவர் ஒருவர்  நியமிக்கப்படலாம்.

பின்வருவன பற்றிய தீர்மானங்களை எடுப்பதற்காக, மாற்றீட்டுத் தீர்மானம் எடுப்பவர்கள் நியமிக்கப்படலாம்:
•    உடல் ஆரோக்கியம், பல் ஆரோக்கியம் மற்றும் ஏனைய வகையான சிகிச்சை பற்றிய முடிவுகள்;
•    உணவு, பாதுகாப்பு, வசிப்பிட ஒழுங்குகள், உடை, சுகாதாரம் மற்றும் இது போன்ற தனிப்பட்ட விடயங்கள்; மற்றும்
•    வங்கி, முதலீடுகள், வீடொன்றை வாங்கல் அல்லது விற்றல், மற்றும் இது போன்ற விடயங்கள் போன்ற சொத்து மற்றும் நிதி சார்பான தீர்மானங்கள்.

மாற்றீட்டுத் தீர்மானம் எடுப்பவர்கள் வேறுபட்ட வழிகளில் நியமிக்கப்படலாம்:
•    தனக்காகத் தீர்மானம் எடுப்பதற்காக இன்னொருவரை நியமிக்கும் தத்துவப் பத்திரத்தை (power of attorney) ஒருவர் உருவாக்க முடியும்.
•    தீர்மானமெடுப்பதற்கு, “பாதுகாவலர்” ஒருவரை நீதிமன்றம் அல்லது அரசாங்கம் நியமிக்க முடியும்.
•    சிகிச்சைக்கான தீர்மானம் அவசியமாக இருப்பதுடன், தீர்மானமெடுப்பதற்கான தத்துவப்பத்திரம் அல்லது பாதுகாவலர் இல்லாத போது, அதைச் செய்வதற்காக குடும்ப அங்கத்தவர் ஒருவர் தானாக நியமிக்கப்படுவார்.

ஞாபகசக்தி அல்லது ஆளுமைக் கோளாறு (dementia) இருக்கும் முதியோர், மனநல ஆரோக்கிய அல்லது விருத்தி வலுவிழப்புள்ளவர்கள், பிறந்த பின்னர் மூளையில் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மற்றும் கடுமையான நோய்வாய்ப்பட்டவர்கள் சுதந்திரமான தீர்மானங்களை எடுக்க முடியாமல் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. குறுகியதொரு காலத்துக்கு அல்லது நீண்ட காலத்துக்கு  இந்தச் சட்டங்கள் அவர்களுக்குப் பொருந்துவதாக இருக்கும். அனேகமானவர்களுக்கு, அவர்களுடைய வாழ்க்கைக் காலத்தின் ஏதோ ஒரு கட்டத்தில்  இந்தச் சட்டங்களின் பாதிப்பு இருக்கும். அது அவர்களால் சுதந்திரமாகத் தீர்மானமெடுக்க முடியாமல் இருப்பதால் அல்லது சுதந்திரமாகத் தீர்மானமெடுக்க முடியாமல் இருக்கும் குடும்ப அங்கத்தவர் அல்லது சினேகிதர்  ஒருவருக்கு உதவி செய்வதால் ஏற்படலாம். 

இந்தச் சட்டங்கள், அவை செயல்படுத்தப்பட வேண்டிய முறையில் செயல்படுத்தப்படுவதில்லை எனக் கரிசனைகள் உள்ளன; மாற்றீட்டுத் தீர்மானம் எடுப்பவர்கள் தங்களுடைய பங்கைத் தவறாகப் பயன்படுத்தலாம்; தங்களுக்கான தீர்மானங்களில் அந்த நபர்கள் கட்டுப்பாட்டை இழக்கலாம்; மற்றும் தங்களுடைய உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வது நபர்களுக்கு கடினமாக இருக்கின்றது.

சட்டத் திறன், தீர்மானமெடுத்தல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்களில் மாற்றங்களுக்கான 54 பரிந்துரைப்பு வரைவுகளை ஒன்ராரியோ சட்ட ஆணைக்குழுவினரின் (LCO) சட்டத் திறன், தீர்மானமெடுத்தல் மற்றும் பாதுகாப்பு பற்றிய இடைக்கால அறிக்கை முன்மொழிகிறது.

இந்தச் சட்டம் பற்றிய கரிசனைகள்
இந்தச் சட்டத்தால்  நேரடியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு தங்களுடைய உரிமைகளை அமுல்படுத்துவதில் அல்லது முரண்பாடுகளைத் தீர்ப்பதில் சிக்கல்கள் இருக்கலாம்,
ஏனெனில் தத்துவப் பத்திரம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான விடயங்களைக் கையாளும் நீதிமன்றம் சார்ந்த அமைப்பு செலவு மிகுந்ததாகவும் சிக்கலானதாகவும் அச்சுறுத்துவதாகவும் இருக்கின்றது. இடைக்கால அறிக்கை பின்வருவனவற்றை முன்மொழிகிறது:

•    இந்த விடயங்களைப் பற்றிய தீர்மானங்களை நீதிமன்றங்களிலிருந்து நீக்கி
நிர்வாக இணக்கமன்று, ஒப்புதல் மற்றும் திறன் வாரியம், ஒன்றுக்கு இடம்மாற்றல் (administrative tribunal, the Consent and Capacity Board);
•    இந்த விடயங்களில் வினைத்திறனாகச் செயல்படுவதற்காக ஒப்புதல் மற்றும் திறன் வாரியத்தைச் சீரமைத்தல்;
•    சட்ட உதவி (Legal Aid) மற்றும் “பிரிவு 3 counsel” போன்ற தனிநபர்களுக்குக் கிடைக்கும் ஆதரவுகளைப் பலப்படுத்தல்;
•    விசேடமான மத்தியஸ்தத் திட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்தல்; மற்றும்
•    விசாரணை ஒன்று பூர்த்தியடையும் போது, அரசாங்கப் பாதுகாவலர் அல்லது அறங்காவலருக்கு அதிகளவான தெரிவுகளைக் கொடுத்தல்.

இந்தச் சட்டத்தின் இப்பகுதியுடன் தொடர்பான பலருக்கு இது புரிவதில்லை. நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களை மட்டுமன்றி, சட்டத்தைப் பிரயோகிக்க வேண்டிய தொழில்நிபுணர்கள் மற்றும் சேவை வழங்குநர்களையும் இது உள்ளடக்குகின்றது. சட்டம் எப்போதும் சரியாகப் பயன்படுத்தப்படாமலிருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இடைக்கால அறிக்கை பின்வருவனவற்றை முன்மொழிகிறது:

•    இந்த பகுதியில் தகவல் வளர்ச்சியையும் கல்வியறிவையும்  ஒருங்கிணைப்பதற்காக தெளிவான பங்காற்றும் அமைப்பொன்றை சட்டத்தில் இனம்காணல் ;
•    தகவல்களுக்காக central clearinghouse ஒன்றை உருவாக்கல்;
•    Health Care Consent Act (ஆரோக்கியப் பராமரிப்புக்கான ஒப்புதல்); சட்டத்தின் கீழ் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தவர்களுக்கான  தகவல்கள் வழங்கலை வலுப்படுத்தல்
•    ஆரோக்கிய ஒழுங்குமுறைக்கான கல்லூரிகள் (health regulatory colleges) மற்றும் நிபுணத்துவ கல்வி நிறுவனங்களின் பங்கை வலுப்படுத்தல்; மற்றும்
•    சட்டத்தில் குழப்பமிருக்கும் பகுதிகளைத் தெளிவுபடுத்தல் .

Health Care Consent (ஆரோக்கியப் பராமரிப்புக்கான ஒப்புதல்) சட்டத்தின் கீழான சட்டத் திறன் மதிப்பீடுகளின் தரம் பற்றிக் கரிசனைகள் உள்ளன, தீர்மானமெடுப்பதற்கான திறனுள்ளவர்கள் அல்லது திறனற்றவர்கள் என நபர்கள் தவறுதலாக இனம் காணப்படலாம்.  தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு, ஒருவர் சட்டரீதியாக திறனற்றவர் என இனம் காணப்படும்போது, அவர்களுக்கு அவர்களுடைய உரிமைகள் பொருத்தமான முறையில் அறிவிக்கப்படாமலிருக்கலாம். இடைக்கால அறிக்கை பின்வருவனவற்றை முன்மொழிகிறது:

•    உரிமைகள் பற்றிய தகவல்களை வழங்குவதற்கான திறன் மதிப்பீடு மற்றும் குறைந்தபட்ச தரங்களுக்கான மதிப்பீட்டுக்குரிய அதிகாரப்பூர்வ வழிமுறைகளை உருவாக்குதல்;
•    மிகவும் தேவையானவர்களுக்கு நிபுணத்துவ மற்றும் தனிப்பட்ட ஆலோசனை வழங்கும் வழிகளை ஆராய்தல்;
•    இந்த பகுதிக்குச் சிறப்பான மேற்பார்வை வழங்கவும் கண்காணிக்கவும் ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களைப் பயன்படுத்தல்; மற்றும்
•     பிரச்சினையைச் சரி செய்வதற்கு மேலும் தேவைகள் நிறைவேற்றப்படவேண்டுமா எனப் பார்ப்பதற்காக இந்த மாற்றங்களைக் கண்காணித்தல் மற்றும் மதிப்பிடல்

நபர்கள், தங்களுடைய வாழ்க்கையில் முடியுமானவரைக்கும் கட்டுப்பாட்டைப் பராமரிப்பதும் மிகவும் அவசியமானதாக இருந்தாலேயன்றி தீர்மானம் எடுப்பதற்கான உரிமை எடுக்கப்படாதிருத்தலும் முக்கியமாகும்.. இடைக்கால அறிக்கை பின்வருவனவற்றை முன்மொழிகிறது:

•    சுதந்திரமாக முடிவுகளை எடுக்கும் திறனற்றவரின்  தேவைகளுக்கு சேவை வழங்குநர்கள் மற்றும் மதிப்பீட்டைச் செய்பவர்கள் இடமளிக்க வேண்டும்;
•    மாற்றீட்டுத் தீர்மானம் எடுப்பவர் நியமிக்கப்படும் போது, யாருக்காக அவர்கள் தீர்மானம் எடுக்கின்றார்களோ, அவர்களின் பெறுமானங்கள் மற்றும் விருப்பங்களுக்குக் கவனம் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்;
•    அவர்களுக்கான தீர்மானங்களை எடுப்பதற்குப் பதிலாக. அவர்கள் தீர்மானங்கள் எடுப்பதற்கு உதவும் ஒருவரைத் தனிநபர்கள் நியமிப்பதை அனுமதிக்கும் தெரிவொன்று உருவாக்கப்பட வேண்டும்;
•    பாதுகாவலர் ஒருவரை நியமிக்கும் போது, வேறு ஏதாவது உள்ளீட்டுக் குறைவுத் தெரிவு இருக்கின்றதா என்பதில் அதிகளவில் கவனம் செலுத்தப்பட வேண்டும்;
•    பாதுகாவலர் தேவையா என்பதை ஒழுங்காகப் பரிசீலிப்பதற்கு நல்ல வாய்ப்புக்கள் இருக்க வேண்டும்; மற்றும்
•    உதாரணமாக ஒரு தனித் தீர்மானத்தை எடுப்பதற்காகவேனும் அதிகளவில் எல்லைப்படுத்தப்பட்ட பாதுகாவலரை நியமிப்பதற்கான சாத்தியம் இருக்க வேண்டும்.

தத்துவப்பத்திரம் ஒன்றின் கீழ், நியமிக்கப்பட்ட நபர்கள், இந்த நியமனத்தை தவறாகப் பயன்படுத்தலாம் அல்லது துஷ்பிரயோகம் செய்யலாம் எனப் பலர் கரிசனைப் படுகின்றார்கள், உதாரணமாக, ஒருவருடைய பணத்தை அல்லது சொத்தை தங்களுடைய நன்மைக்காக பொருத்தமற்ற முறையில் பயன்படுத்தல். இடைக்கால அறிக்கை பின்வருவனவற்றை முன்மொழிகிறது:

•    தத்துவப் பத்திரம் ஒன்றின் கீழ் ஒருவர் செயற்படும்போது,  சட்டத்தின் கீழான அவருடைய பொறுப்புக்களையும் அவற்றைப் பூர்த்திசெய்யாவிடில் அவற்றுக்கான பின்விளைவுகளையும் ஏற்றுக்கொள்ளும் அர்ப்பணிப்புகான வாக்குமூலத்தில் (Statement of Commitment) அவர் கையொப்பமிட வேண்டும்;
•    தத்துவப் பத்திரம் ஒன்றின் கீழ் ஒருவர் செயற்படும்போது, அந்தத் தத்துவப் பத்திரத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு அவர் செயற்படுவதாக அறிவிப்புக்களை வழங்க வேண்டும் ; மற்றும்
•    தத்துவப் பத்திரம் ஒன்றை உருவாக்கும் தனிநபர்களுக்கு, நியமிக்கப்பட்ட நபர் அவரது பொறுப்புகளை நிறைவேற்றுகிறாரா என்பதை உறுதி செய்வதற்குத் தகுந்த முயற்சிகளை செய்வதற்கான  குறிக்கப்பட்டுள்ள அதிகாரமும் கடமைகளும் ”கண்காணிப்பாளர்”  ஒருவரை நியமிப்பதற்கான தெரிவும் உள்ளது.

சமூகம் மாறுவதற்கேற்ப, மாற்றீட்டுத் தீர்மானம் எடுப்பவராக இருப்பதை விரும்புவதுடன் அப்படிச் செயற்பபடவும்கூடிய அதற்கேற்ற திறன்களையும் கொண்ட குடும்பத்தவர்கள் அல்லது நண்பர்கள் சொற்பமானவர்களுக்கே இருக்கின்றார்கள். தற்போது, அப்படியான நிலை இருந்தால் அரசாங்கப் பாதுகாவலர் மற்றும் அறங்காவலர் இந்தப் பங்கை எடுக்கக் கூடும். . இடைக்கால அறிக்கை பின்வருவனவற்றை முன்மொழிகிறது:

•    Health Care Consent (ஆரோக்கியப் பராமரிப்பு ஒப்புதல்) சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட விரும்பாத குடும்ப அங்கத்தவர்களைக் குறிப்பிடுவதற்கு தனிநபர்களை அனுமதித்தல்;
•    சமூகத் தனிமைப்படுத்தல், குடும்ப இயக்கவியல் அல்லது தேவைகளின் சவால் தன்மை போன்ற காரணங்களினால், ஏனைய தெரிவுகள் மூலம் தகுந்த முறையில் சேவை பெற முடியாதவர்களுக்கு நிபுணத்துவமான நம்பிக்கையான சேவைகளை வழங்குவதில் அரச பாதுகாவலர் மற்றும் அறங்காவலரின் பங்கில் கவனம்செலுத்தல்;
•    நாளாந்தத் தீர்மானமெடுத்தலில் சமூக நிறுவனங்கள் பங்கெடுக்க முடியுமா என்பதை ஆராய்தல்; மற்றும்
•    தகுந்த பாதுகாப்பு மற்றும் மேற்பார்வையுடன், நிபுணத்துவப் பிரதிநிதிகளுக்கான உரிமம் மற்றும் ஒழுங்குமுறை திட்டத்தை அரசாங்கம் ஸ்தாபிப்பதற்கான சாத்தியம் உள்ளதா என்பதை ஆராய்தல்.

மாற்றங்கள், பாதிக்கப்பட்டவர்களுடனான பரந்த ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டவையாக இருந்தால், அவை வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். எங்களுடைய முன்மொழிவுகளை உருவாக்குவதற்கு, முதியோர்கள், வலுவிழந்தோர், அவர்களுடைய குடும்பத்தவர்கள், ஆரோக்கியப் பராமரிப்பாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், அரசாங்கம், சமூக அமைப்புக்கள், சேவை வழங்குநர்கள், வக்கீல்கள் மற்றும் பலரிடம் நாங்கள் ஆலோசனை பெற்றோம். எங்களுடைய முன்மொழிவுகள் பற்றி உங்களுக்கு ஏதாவது கருத்துரைகள் இருந்தால் உங்களின் கருத்தையும் நாங்கள் அறிய விரும்புகின்றோம், எப்படிச் செய்வது என்பதைத் தயவுசெய்து பார்க்கவும்: “Share Your Feedback” http://www.lco-cdo.org/en/capacity-guardianship-interim-report-share-your-feedback.

சட்டத் திறன், தீர்மானமெடுத்தல் மற்றும் பாதுகாப்பு பற்றிய LCO வின்
இடைக்கால அறிக்கை, அதன் ஏனைய செயல்திட்டங்கள் பற்றிய தகவல்களுடன் இணையத்தில் கிடைக்கின்றது:www.lco-cdo.org.